கொவிட் - 19 உம் இளைஞர்களின் பொறுப்புக்கூறலும்
“கொவிட் – 19” என கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது உலகின் பெரும்பாலான நாடுகளை உலுக்கியெடுத்து கொண்டிருக்கின்றது. உலகளவில் 177 நாடுகள் பிராந்தியங்களில் இப்பந்தி எழுதப்படும் வரை 877584 பேருக்கு இத்தொற்று ஏற்பட்டுள்ளது. 43569 பேர் கொரோனா தொற்றினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். 185,067 பேர் இத்தொற்றிலிருந்து பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சம்பத்திய தரவுகள் கூறுகின்றன. கொரோனா வைரஸானது சீனாவின் வூஹான் மாகாணத்தில் 2019 டிசம்பர் மாதமளவில் கண்டறியப்பட்டது. வூஹானில் உள்ள அசைவ உணவுகளின் சந்தையில் விற்கப்பட்ட விலங்குகளிடம் இருந்தே இந்நோய் பரவியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளது. வூஹான் மாகாணத்தில் இருந்து சீனாவின் பிறமாகாணங்களுக்கும் உலகின் பிற நாடுகளுக்கும் இவ்வைரஸ் தொற்றானது பரவத்தொடங்கியது.
இவ்வைரஸ் தொற்றானது ஒருவருக்கு பரவி அறிகுறிகள் காட்டுவதற்கு 14 நாட்கள் எடுத்துக்கொள்ளும். அந்த காலப்பகுதிக்குள் பாதிக்கப்பட்ட நபர் மூலம் மற்றயர்வளிடம் இத்தொற்று பரவிக் கொள்கின்றது. கொரோனா பாதிக்கப்பட்ட நபர் இருமும் போது இவ்வைரஸ் காற்றில் கலக்கலாம். இக்காற்றை சுவாசிக்கும் போது அல்லது இவ்வைரஸ் பரவிய இடங்களை தொட்டுப்பின் கண்கள், மூக்கு அல்லது வாயை தொடும் போது இத்தொற்று ஏற்படலாம். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முதல் வாரமளவில் காய்ச்சல் உணரப்படுவதுடன், அதன் பின்னர் வறட்டு இருமல் மற்றும் சுவாசக் கோளாறு ஏற்படுகின்றது. இத்தொற்றினால் உயிரிழப்பவர்களின் வீதம் சார்ஸ்ஸ் மற்றும் எபோலா வைரஸ் இறப்பு வீதத்தைவிட மிகக்குறைவான வீதத்திலேயே காணப்படுகின்றது. கொரோனா தொற்றினால் இறப்பவர்கள் பெரும்பாலும் வயதுமுதிர்வு, நிமோனியா, சிறுநீரக பழுது காரணமாக உயிரிழக்க நேருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றானது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏற்பட்டாலும், அதனால் முதியவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படுகின்றனர். இளைஞர்களாகிய நாம் குழந்தைகளையும், முதியவர்களையும், தத்தமையும் பாதுகாத்துக்கொள்ளும் தார்மீகப் பொறுப்பு காலத்தினால் ஏற்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தினை குறைப்பதற்கும், பொதுமக்களை பாதுகாப்பதற்குமாக அரசாங்கங்களும், உலக சுகாதார ஸ்தாபனமும் இணைந்து பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளனர். பெரும்பாலும் நாடுகளில் கடுமையான முறையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் தத்தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார். மருத்துவர்களினால் பொதுமக்கள் அடிக்கடி தத்தமது கரங்களை கழுவுமாறு, வெளியிடங்களுக்கு செல்லும் போது சமூகஇடைவெளியினைப் பேணுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள், சுகாதார பணியாளர்கள், துப்பரவு தொழிலாளர்கள், பாதுகாப்புத்துறையினர் தங்களது நலன்களையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களுக்காக பாடுபடும் போது அவர்களது சேவை சிலரது செயற்பாடுகளால் வீணடிக்கப்படுகின்றது.
ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தியதின் நோக்கம் கொரோனா சமூகத்தொற்றலாக பரவாமல் தடுப்பதற்காகும். ஊரடங்கு சட்டத்தினை மீறியவர்களின் எண்ணிக்கை, இந்நோய் குறித்தான கவனயீனத்தை விளக்குகின்றது. ஊரடங்கு மதித்து வீடுகளில் பாதுகாப்பாக இருப்பது இளைஞர்களாகிய நமது கடமையாகும். ஊரடங்கு தளர்த்தப்பட்டு, போது இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் போது, வீட்டிலுள்ள முதியவர்களை அனுப்பாது இளைஞர்கள் உரிய பாதுகாப்புடன் சுயஇடைவெளியை பேணி அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வது காலச்சிறந்தது. தேவை ஏற்படாத சந்தர்ப்பங்களில் வெளிவருவதை தவிர்ப்பது நலமாகும். ஏனெனில் அநாவசியமாக நம்மால் ஏற்படுத்தப்படும் இடைஞ்சல் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யவிருக்கும் நபர்களின் பாதுகாப்பையும் நேரத்தையும் வீணடிக்கலாம்.
தேவைக்கதிகமாக பொருட்களை வாங்குவதை தவிர்ப்பதன்மூலம் செயற்கை தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு ஏற்படுவதினை தவிர்க்கலாம். நாளாந்தம் வேலைக்கு சென்று அதன் பேரில் வாழ்க்கையை நடத்துபவர்கள் வேலையில்லாத இந்த காலப்பகுதியில் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். தேவைக்கதிகமான பொருட்களையோ நிதிஉதவியினை செய்வதன் மூலமாகவோ நம்மால் இயன்ற உதவிகளை அளிக்கலாம். உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் செய்திகளை மட்டுமே பகிர்வதன் மூலம் தேவையற்ற குழப்பங்களையும் சந்தேகங்களையும் தவிர்க்கலாம்.
இணைய வழி தொடர்பாளர்களாக இருக்கும் இளைய சமுதாயத்தினர் விழிப்புடன் செயற்பட்டு நம்மையும், நமது சமூகத்தையும், நமது தேசத்தையும் கொரோனாவின் கோரப்பிடிப்பிலிருந்து பாதுகாப்பதன் மூலம் நம்மால் இயன்ற பங்களிப்பினை செய்யலாம். தனித்திருப்பதுடன் கொரோனா பரவுவதை தவிர்த்து இருங்கள்!
Comments
Post a Comment